Actor suriya: சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அந்த படம் 2022ம் வருடம் மார்ச் மாதம் வெளியானது. அதன்பின் இதுவரை சூர்யாவின் படம் எதுவும் வெளியாகவில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற படம் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்திற்காக வித்தியாசமான கெட்டப்புக்கு மாறினார் சூர்யா. இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதோடு, இந்த படம் பல மொழிகளிலும் வெளியாவதாக அறிவித்து ஹைப் ஏற்றினார்கள். கடந்த 2 வருடங்களாக இந்த பட வேலைகள் நடந்தது.
கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பெரும்பாலும், மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இது சரித்திர கதை என்பது பின்னரே தெரியவந்தது. அதோடு, இந்த படம் 2 பாகங்களாக உருவாவதாகவும் அறிவித்தார்கள். ஒருவழியாக படத்தை முடித்து அக்டோபர் 10ம் தேதி பட ரிலீஸ் என அறிவித்தார்கள்.
ஆனால், ரஜினியின் வேட்டையன் படமும் அதே தேதியில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் கங்குவா படம் பின் வாங்கியது. ரஜினி சார் எனக்கு மூத்தவர். அவருக்கு வழி விடுவதே என் சந்தோஷம். அவர் படம் வெளியாகும் போது என் படம் வெளியாகாது’ என செண்டிமெண்ட்டாக சொன்னார் சூர்யா.
இதனால், சூர்யா ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். இப்போது நவம்பர் 14ம் தேதி கங்குவா படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படம் 2025 ஜனவரி பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதேபோல், இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சூர்யா.
சூர்யாவை வைத்து என்.ஜி.கே படத்தை தயாரித்த நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கங்குவா ரிலீஸுக்கு பின் துவங்கவுள்ளது. அதோடு, படத்தை வேகமாக முடித்து 2025 மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். கடந்த 2 வருடங்களாக சூர்யாவின் படமே வெளியாகாத நிலையில் 6 மாதங்களில் தொடர்ந்து 3 படங்கள் வெளியாவது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றே நம்பலாம்.